செய்திகள்

அரசு கொள்முதல் செய்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமானது

Published On 2018-09-19 08:57 GMT   |   Update On 2018-09-19 08:57 GMT
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு குருகுலம் கிராமத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான 51 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள் இங்கு வைக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் சமீபத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரம் நெல் மூட்டைகள் குருகுலம் கிராமத்தில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்படி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மீது தார்ப்பாய்கள் போட்டு பாதுகாப்புடன் மூடி வைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று மாலை மதுராந்தகம் பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் குருகுலம் கிராமத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகளும் நனைந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், நெல் வாங்கும் போது ஈரப்பதம் இருந்தால் அதை அதிகாரிகள் வாங்க மறுக்கிறார்கள். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகியுள்ளன என்றனர்.

Tags:    

Similar News