செய்திகள்

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Published On 2018-09-13 17:38 GMT   |   Update On 2018-09-13 17:38 GMT
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஊட்டி:

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நீலகிரி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ஹிரியன் ரவிக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் விபத்துகள் மூலம் மனித உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக தற்கொலை செய்வதால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இந்தியாவில் ஒரு நிமிடத்துக்கு ஒரு நபர் தற்கொலை செய்கிறார் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பொதுவாக இளைஞர்கள் மனதில் தான் தற்கொலை எண்ணம் அதிகமாக காணப்படு கிறது. குறிப்பாக 15 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு, தற்கொலை செய்யும் எண்ணம் அதிகரித்து உள்ளது. ஏதேனும் ஒரு விஷயத்தால் மனஉளைச்சலுக்கு உள்ளாகிறவர்களுக்கு தற்கொலை எண்ணம் எழுகிறது.

இதற்கு மனஅழுத்தம், மனச்சிதைவு நோய், குடும்ப பிரச்சினை, குடிப்பழக்கம் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாவது போன்ற காரணங்கள் ஆகும். தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் எப்போதும் தனிமையில் இருப்பார்கள். அவர்கள் வேலை மற்றும் குடும்பத்தினர் இடையே பேசாமலும், ஆர்வம் காட்டாமலும் இருப்பர். அவ்வாறு இருப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் என்ன காரணத்துக்காக தற்கொலை எண்ணத்துக்கு வந்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். தற்கொலை முயற்சியை தடுக்க வேண்டும்.

வருகிற 2020-ம் ஆண்டுக்கு மேல் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதை விட, தற்கொலையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று ஒரு ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தற்கொலை என்பது மிகவும் குறைவாக உள்ளது. இருந்தாலும், தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் இருந்தால் அவர்களை குடும்பத்தினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று உரிய ஆலோசனை பெற வேண்டும். எனவே, அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் மனநிலையை புரிந்து கொண்டு, ஒருவேளை தற்கொலை எண்ணம் இருந்தால் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மனநல மருத்துவர் பூர்ணஜித், ஊட்டி வட்டார மருத்துவர் முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News