செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: தஞ்சையில் பெட்ரோல் திருடர்கள் அட்டகாசம்

Published On 2018-09-12 11:11 GMT   |   Update On 2018-09-12 11:17 GMT
தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் பெட்ரோல் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சை நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி, செயின் பறிப்பு, பைக் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகளவு நடந்தன.

இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் அதிகமாக புகார்களும் எழுந்தன. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்ததால் திருடர்கள் நடமாட்டம் குறைந்தது.

தஞ்சை தொம்பன்குடிசை அருகே உள்ள செண்பக வள்ளி நகர் 2-வது தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருக்களில் 6 மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் ஒரு மின் கம்பங்களிலும் தெரு விளக்குகள் பொருத்தப்பட வில்லை.

இதனால் செண்பகவள்ளி 2-வது தெரு இரவு நேரம் முழுவதும் இருட்டாக காட்சியளிக்கும். வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தங்களது மோட்டார் சைக்கிள்களை வீட்டின் வெளியே தான் நிறுத்துவர்.

இதை பயன்படுத்தி கொண்டு பைக் கொள்ளையர்கள் அதிகாலை 3 மணியளவில் வந்து மோட்டார் சைக்கிளை திருடி செல்கின்றனர்.

தற்போது பெட்ரோல் விலை கிடுகிடு என்று உயர்ந்துள்ளது. லிட்டர் ரூ.83-க்கு விற்பதால் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருட்டு சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கூறியதாவது:-

தஞ்சை 44-வது வார்டு தொம்பன்குடிசை அருகே உள்ள செண்பகவள்ளி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு, பெட்ரோல் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும் பாலும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக தான் உள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் தான் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது.

இதனால் மாநகராட்சி அதிகாரிகள் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க எங்கள் தெருக்களில் மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும். மேலும் போலீசார் துறையினர் இப்பகுதியில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News