செய்திகள்

சென்னையில், 2500 இடங்களில் விநாயகர் சிலைகள்

Published On 2018-09-12 06:46 GMT   |   Update On 2018-09-12 06:46 GMT
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 2500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. #VinayagarChathurthi
சென்னை:

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் 2500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

விநாயகர் சிலைகளை வைப்பதற்கு இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுநல அமைப்பினரும் விநாயகர் சிலைகளை வைக்கிறார்கள்.

இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் செய்யப்படும். இதன் பிறகு குறிப்பிட்ட நாட்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.

எந்தெந்த தேதிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கலாம் என்பது பற்றி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது பற்றி இன்று மாலை முடிவெடுக்கப்பட இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விநாயகர் சிலைகளை வைப்பவர்கள் போலீசாருடன் இணைந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விழாக் கமிட்டியினருக்கு பல்வேறு ஆலோசனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிப்பாக விழா குழுவினர் பின்பற்ற வேண்டும். #VinayagarChathurthi
Tags:    

Similar News