செய்திகள்

ஜெயிலுக்கு அழைத்து சென்றபோது பிரபல கொள்ளையன் தப்பிஓட்டம்- 2 சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2018-09-08 07:21 GMT   |   Update On 2018-09-08 07:21 GMT
குடியாத்தத்தில் ஜெயிலுக்கு சென்றபோது கொள்ளையன் தப்பிய சம்பவத்தில் சப்-இன்ஸ் பெக்டர் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கே.எம்.ஜி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் நசீர். இவருடைய மகன் அகம்மதுபாஷா (வயது 28). பிரபல கொள்ளையன். இவர் மீது குடியாத்தம் டவுன், தாலுகா, பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல கொள்ளை வழக்குகள் உள்ளன.

தலைமறைவாக இருந்து தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த கொள்ளையன் அகம்மதுபாஷாவை, குடியாத்தம் டவுன் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். குடியாத்தம் மாஜிஸ்திரேட் சந்திரகாசன் பூபதி முன்பு ஆஜர்படுத்தினர். ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதையடுத்து, குடியாத்தம் கிளைச்சிறைக்கு அகம்மது பாஷாஷை, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் அழைத்து சென்றனர்.

ஜெயிலுக்கு செல்லும் வழியில் போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு கொள்ளையன் அகம்மதுபாஷா தப்பி ஓடி விட்டார். போலீசார் விரட்டி சென்றும், அவரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

டி.எஸ்.பி. பிரகாஷ்பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ் மற்றும் செங்குட்டுவன் அடங்கிய தனிப்படை போலீசார், தப்பி ஓடிய கைதியை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன் மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் அதிரடியாக சஸ்பெண்டு செய்து மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #tamilnews
Tags:    

Similar News