செய்திகள்

சாதி பாகுபாடு பார்த்த பள்ளி தலைமை ஆசிரியைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Published On 2018-09-07 20:59 GMT   |   Update On 2018-09-07 20:59 GMT
மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் எழுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக அனுசுயா பணியாற்றினார். அவர் சாதி பாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை தனியாக அமர வைத்ததாக புகார் எழுந்தது.

இது பற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒரு பெண் அனுசுயாவை செருப்பால் தாக்கினார். பதிலுக்கு அவரும் தன்னுடைய செருப்பால் அவர்களை தாக்கினார். இவை அனைத்தும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அனுசுயாவை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் அனுசுயா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனுசுயா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Tags:    

Similar News