செய்திகள்

வாழப்பாடியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

Published On 2018-09-06 16:53 GMT   |   Update On 2018-09-06 16:53 GMT
வாழப்பாடியில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி கணபதி நகரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 40). இவர் கடந்த 2006-ம் ஆண்டு மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலங்களை அளவீடு செய்து பட்டா வழங்க கோரி இ-சேவை மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பார்த்த வாழப்பாடி நில அளவையர் சவுந்தரராஜன் (30) என்பவர், இந்திராணியை அழைத்தார். அவரிடம் உரிய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த, நில அளவையர் சவுந்தரராஜன், நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு இந்திராணி அவ்வளவு தொகை தர இயலாது என்று தெரிவித்தார். பின்னர் ரூ.15 ஆயிரம் தருவதாக தெரிவித்தார்.

எனினும் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத இந்திராணி, இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் துணை சூப்பிரண்டு சபரிராஜன், இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் இந்திராணியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.

வாழப்பாடி பஸ்நிலையம் எதிரே உள்ள பூக்கடை சந்துக்குள் இந்திராணி, நிலஅளவையர் சவுந்திரராஜனிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக சவுந்திரராஜனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை வாழப்பாடி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் வாழப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News