செய்திகள்
களியக்காவிளை அருகே வீட்டு கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை
களியக்காவிளை அருகே வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கப்பணம், 3 பவுன் தங்க செயினை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நாகர்கோவில்:
களியக்காவிளையை அடுத்த நெடுவிளை, மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (வயது 55). இவரது மகள் ஏஞ்சல் ஹெலன்ராணி. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
நேற்று காலையில் தாஸ் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்த அவரது மகளும் வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்றிருந்தார். பின்னர் கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம், 3 பவுன் தங்க செயின் ஒன்று, விலை உயர்ந்த செல்போன் ஒன்று ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார். அவர் இது தொடர்பாக களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உடைக்கப்பட்ட கதவு மற்றும் பீரோக்களில் கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் போலீசார் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்து இருப்பதால் உள்ளூர் கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.