செய்திகள்

விருத்தாசலம் அருகே தனியார் பஸ் மீது பள்ளி பஸ் மோதல்: 25 மாணவர்கள் படுகாயம்

Published On 2018-09-03 11:11 GMT   |   Update On 2018-09-03 11:11 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனியார் பஸ் மீது பள்ளி பஸ் மோதிய விபத்தில் 25 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது கண்டப்பன் குறிச்சி. இங்கு தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இன்று காலை பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று கிராம பகுதிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.

இதே நேரத்தில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து வேப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. பஸ்சில் இருந்து பயணிகள் சிலர் கீழே இறங்கினர்.

அப்போது அந்த வழியாக பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த பஸ் அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின் பகுதியில் மோதியது.

இதில் மாணவ-மாணவிகள் பயணம் செய்த பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்த மாணவ-மாணவிகள் கூச்சல்போட்டு அலறினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்குள் சிக்கி காயம் அடைந்த மதுமிதா (வயது 11), கவிப்பிரியன் (7), சிவசங்கர் (7), பூங்காஸ்ரீ, வேலமாயி (13), ஏழுமலை (10), புவனேஷ்வரி (13), நித்யா (5), வித்யா (11), கார்முகில் (4), தர்ஷினி (7), கோகுலகிருஷ்ணன் (3), சிவா (3), லோகேஷ் (4), சிவபாலன் (10) உள்பட 25 பேரை மீட்டனர்.

பின்பு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் விளாங்காட்டூர் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News