செய்திகள்

திருவாரூர் அருகே வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.23½ லட்சம் மோசடி

Published On 2018-09-01 10:01 GMT   |   Update On 2018-09-01 10:01 GMT
திருவாரூர் அருகே வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.23½ லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை பகுதியை சேர்ந்தவர் சுதிர்தராஜ். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(வயது55). கொல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி செல்வபாக்ய செந்தில் குமாரி(50). பூந்தோட்டம் உதவிபெறும் நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் அருண் பாக்கியராஜ். இவர்களது தோழி சுப்புலட்சுமி.

அருண்பாக்கியராஜ் அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வெளிநாடு அனுப்புவதாக முத்துராமலிங்கம், அவரது மனைவி செல்வபாக்ய செந்தில்குமாரி, இவர்களது மகன் அருண்பாக்கியராஜ் மற்றும் சுப்புலட்சுமி ஆகியோர் ஆசை வார்த்தை கூறி பணம் பெற்றுள்ளனர். இவ்வாறு கடந்த 2 வருடங்களாக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் ரூ.23½ லட்சம் வரை பணம் வாங்கியுள்ளனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி யாரையும் இதுவரை வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. இதனால் பணத்தை திரும்ப தரும்படி பலமுறை கேட்டும் தரவில்லை. எனவே வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய 4 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அரசு பள்ளி ஆசிரியர்களான கணவன்-மனைவி மற்றும் இவர்களது மகன், தோழி உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News