செய்திகள்

விநாயகர் சிலை வைக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் - கலெக்டர் பேச்சு

Published On 2018-08-31 17:40 GMT   |   Update On 2018-08-31 17:40 GMT
விநாயகர் சதுர்த்தியையொட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய தடையின்மை சான்று பெற்று விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என்று திருப்பூர் கலெக்டர் கூறியுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா விசர்ஜன ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் போலீஸ் கமி‌ஷனர் மனோகரன், போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, துணை கமி‌ஷனர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

வரும் 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகள் நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட சப்-கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி போலீஸ் கமி‌ஷனர்கள் ஆகியோரிடம் உரிய தடையின்மை சான்று பெற்று விநாயகர் சிலைகளை நிறுவ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடத்துடன் சேர்த்து அதிகபட்ச 10 அடிக்கும் மேலாக இருக்ககூடாது. ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டோ அல்லது அவர்களது மனம் புண்படும்படியோ ஆங்காங்கு நிறுத்தி கோ‌ஷமிடல் கூடாது. ஊர்வலத்தில் எவ்வித ஆயுதங்களையும் எடுத்து வரக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, திருப்பூர் சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாதனைக்குறள், போலீஸ் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டார்.
Tags:    

Similar News