செய்திகள்

கோவை ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்த வந்தார்களா? - வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

Published On 2018-08-29 05:56 GMT   |   Update On 2018-08-29 05:56 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்காரர்கள் என கருதி பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடத்தில் 3-வது மாடியில் குழந்தைகள் நலப்பிரிவு உள்ளது. இந்த வார்டு பகுதியில் இன்று காலை 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக திரிந்தனர். அங்கு மிங்குமாக சிறிது தூரம் சுற்றிய இருவரின் நடவடிக்கைகள் அங்கிருந்த பொதுமக்களுக்கு சந்தேகத்தை அதிகரித்தது.

அவர்கள் இருவரும் குழந்தைகளை கடத்த வந்திருப்பதாக வார்டில் இருந்தவர்கள் கருதினர். இதையடுத்து 2 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்து அவர்களிடம் நீங்கள் யார்? இங்கு உங்களது உறவினர்கள் யார் தங்கியிருக்கிறார்கள்? எதற்காக இங்கு சுற்றுகிறீர்கள்? என கேட்டனர்.

அதற்கு இரு வாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதுகுறித்து பொதுமக்கள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்ற போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் ஒருவர் மதுரையை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் கோவையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எதற்காக ஆஸ்பத்திரிக்குள் சுற்றினர்? என போலீசார் கேட்ட போது, உரிய பதிலை கூறவில்லை.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News