செய்திகள்
கொள்ளிடக்கரையோரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கண்டியாமேடு அரசு தொடக்க பள்ளியில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

சிதம்பரம் அருகே வெள்ளம்- 10 நாட்களாக மூடி கிடக்கும் அரசு பள்ளிகள்

Published On 2018-08-24 16:46 IST   |   Update On 2018-08-24 16:46:00 IST
சிதம்பரம் அருகே ஏற்பட்ட வெள்ளத்தால் அரசு பள்ளிகள் கடந்த 10 நாட்களாக மூடி கிடப்பதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து கீழணைக்கு வந்த காவிரி உபரிநீர் கொள்ளிடத்தில் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடக்கரையோரம் உள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திட்டு காட்டூர், அகரநல்லூர், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், பெராம்பட்டு உள்ளிட்ட 24 கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.

அந்த கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடும் வெள்ளப்பெருக்கால் வெள்ளம் பாதித்த கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடப்பட்டன.

கீழணைக்கு வரும் நீர்வரத்து தற்போது குறைந்து வருகிறது. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் குறைய தொடங்கியுள்ளது. மேடான பகுதிகளில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள அகரநல்லூர், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், பெராம்பட்டு, கண்டியாமேடு, எருக்கன்காட்டு பாளையம், வெள்ளூர் உள்ளிட்ட 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தேங்கியிருந்த தண்ணீர் இன்னும் முழுமையாக வடியவில்லை. பள்ளிகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் அந்த 8 கிராமங்களில் உள்ள 8 அரசு பள்ளிகளும் 10 நாட்களாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். எனவே பள்ளிகளை சுற்றியுள்ள தண்ணீரை வடிய வைக்க வேண்டும். பள்ளிகளை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News