செய்திகள்

சஸ்பெண்டு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் மீது 3 கட்ட விசாரணை- வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் தகவல்

Published On 2018-08-24 10:30 GMT   |   Update On 2018-08-24 10:30 GMT
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்ட உதவி பேராசிரியர் மீது 3 கட்ட விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் கூறியுள்ளார்.

கோவை:

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரத்தை அடுத்துள்ள வாழவச்சனூரில் தமிழ்நாடு அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த 19 வயது மாணவி விடுதியில் தங்கி படித்து வந்தார். அதே கல்லூரியில் பணிபுரிந்து வந்த உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்கு விடுதி வார்டன்கள் மைதிலி, புனிதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் மாணவி வாணாபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதன் காரணமாக மாணவி விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி மாவட்ட கூடுதல் நீதிபதி சுமதி சாய்பிரியா ஆகியோரிடம் பாலியல் பிரச்சினை குறித்து மாணவி வாக்குமூலம் அளித்தார்.

அதன் அடிப்படையில் மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் ராமசாமி, வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் தங்க பாண்டியனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக துணை வேந்தர் ராமசாமி கூறும் போது, மாணவியின் புகார் மற்றும் விசாரணை, கோர்ட்டு உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

அவர் மீது 3 கட்டமாக விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News