செய்திகள்

வங்கி கடன் வழங்கக் கோரி பித்தளை குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த தஞ்சை விவசாயிகள்

Published On 2018-08-24 14:16 IST   |   Update On 2018-08-24 14:16:00 IST
தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு பித்தளை குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மற்றும் வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு பித்தளை குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

அப்போது அவர்கள், ‘‘பித்தளை பாத்திரங்களை அடமானமாக வைத்து வங்கிகளில் கடன் வழங்க வேண்டும்’’ என்று கோ‌ஷமிட்டப்படி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கக்கரை சுகுமாரனை மட்டும் அனுப்பி கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர்.

இதையடுத்து அவர் கலெக்டர் அண்ணா துரையை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதன்பிறகு கக்கரை சுகுமாரன் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசிடம் பாசனத்துக்கு தண்ணீர் விடக்கோரி டெல்டா விவசாயிகள் கெஞ்சி போராடியும் தண்ணீர் விடவில்லை. தற்போது கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூருக்கு உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

காவிரியில் தண்ணீர் திறந்து விட்டும் டெல்டா விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. டெல்டா பகுதிகளில் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. ஆறு, வாய்க்கால், குளங்கள் வறண்டு கிடக்கிறது. இதற்கு காரணமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி பதவி விலக வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பல இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 100 டி.எம்.சி.க்கும் மேலான தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் பாயாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்து புதிதாக பயிர்கடன் வழங்க வேண்டும்.

இதற்காக பித்தளை பாத்திரங்களை அடமானமாக கலெக்டரிடம் ஒப்படைக்கவே வந்தோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News