செய்திகள்

சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் உயருகிறது

Published On 2018-08-22 05:37 GMT   |   Update On 2018-08-22 05:37 GMT
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென்வட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கிறது. #TollGate
சென்னை:

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களுக்கான கட்டண விகிதத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் நிர்ணயம் செய்கிறது.

ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடப்படுகிறது. டெண்டர் எடுத்தவர்கள் தங்கள் ஆட்கள் மூலம் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் வேறுபடுகிறது.

நாட்டிலேயே சுங்க கட்டணம் வசூலில் முன்னணியில் இருக்கும் 56 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென்வட்டங்களுக்கு செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் உபயோகிப்பாளர் கட்டணம் 10 சதவீதம் அதிகரிக்கிறது.

வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்தனர்.

சேலம்-உளுந்தூர் பேட்டை- மேட்டுப்பட்டி, திண்டிவனம் -உளுந்தூர்பேட்டை, நல்லூர்-சென்னை, திருச்சி-திண்டுக்கல், நத்தக்கரை-வீரசோழபுரம், விக்கிரவாண்டி தடா (ஆந்திர மாநிலம்), பொன்னம்பலபட்டி ஆகிய 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும்.

இதன் வழியே செல்லும் வாகனங்களுக்கு கட்டண உயர்வு மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி கார்களுக்கு 10 சதவீதம் கட்டணம் அதிகரிக்கும், பஸ்கள், லாரிகளுக்கு 4 முதல் 6 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கும்.


இதுபற்றி வாகன உரிமையாளர்கள் கூறும்போது, ‘நாளுக்கு நாள் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம். தற்போது சுங்க கட்டணத்தையும் உயர்த்த முடிவு செய்து இருப்பதால் மேலும் பாதிக்கப்படுவோம் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகள் உள்பட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 21 சதவீத அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுங்க கட்டணம் மூலம் சாலைகள் பராமரிப்பு மற்றும் பல்வேறு வசதிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் பல சாலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. குடிநீர் வசதி, அவசரகால தொலைபேசி வசதி, உணவு விடுதிகள் போன்றவை உறுதியளித்தபடி செய்து தரப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர்.

சுங்கச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளால் இரவில் பஸ்களில் தூங்கிக்கொண்டு செல்லும் பயணிகளின் தூக்கம் கெடுகிறது. சுகாதாரமான கழிப்பிட வசதிகள் இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயணிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது. #TollGate
Tags:    

Similar News