செய்திகள்

திருவள்ளூர் வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி- இங்கிலாந்து இளம் பெண் துணிகரம்

Published On 2018-08-21 08:36 GMT   |   Update On 2018-08-21 08:36 GMT
இங்கிலாந்து இளம் பெண் ஒருவர் ரிசர்வ் வங்கி பெயரில் போலி வலைதளம் ஆரம்பித்து திருவள்ளூர் வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்துள்ளார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் வசித்து வருபவர் திலீப்குமார். கைத்தறி நெசவாளர்.

இவருக்கு பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லிண்டா போஸ்மன் என்ற பெண் அறிமுகமானார்.

அவர் துணிவியாபாரம் சம்பந்தமாக இந்தியா வர இருப்பதாக திலீப்குமாரிடம் தெரிவித்தார். முன்னதாக தனது உடைகளை இந்தியாவிற்கு அனுப்புவதாகவும் அதனை பணம் கட்டி வாங்கி வைத்துக்கொள்ளும் படியும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வாலிபர் ஒருவர் திலீப் குமாரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது ‘‘உங்கள் முகவரிக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதை பெற ரூ.48,500 கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பணத்தை கட்ட ரிசர்வ் வங்கி பெயரில் இணையதள முகவரியும் கூறினார். இதனை நம்பிய திலீப்குமார் அந்த முகவரியில் பணத்தை கட்டினார்.

இதை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு மீண்டும் திலீப் குமாரை தொடர்பு கொண்ட அதே வாலிபர் விமான நிலையத்தில் சோதனை செய்யத போது பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதாகவும், இதற்கு அபராதமாக ரூ.98 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் ஆர்.பி.ஐ.யிடம் தடையில்லாத சான்றிதழ் பெற ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்டவேண்டும். மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் வகையில் பேசினார்.

இதனால் சந்தேகம் அடைந்த திலீப்குமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் பற்றி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அனைவரும் கும்பலமாக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுவரை ரூ.3 லட்சம் வரை திலீப்குமார் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் பணம் கட்டி இருக்கிறார். அனைத்தும் ஆன்-லைன் மூலமாக நடைபெற்றுள்ளது.

போலியாக ரிசர்வ் வங்கி பெயரில் இணையதளம் ஆரம்பித்து நூதனமாக கும்பல் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏமாற்றபட்டதை உணர்ந்த திலீப் குமார் இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News