செய்திகள்

கொள்ளிடம் பழைய பாலம் இடித்து அப்புறப்படுத்தப்படும்- அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

Published On 2018-08-18 15:30 IST   |   Update On 2018-08-18 15:30:00 IST
கொள்ளிடத்தில் தண்ணீர் முற்றிலுமாக வற்றிய பின்னர் தான் தொழில் நுட்ப குழு தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் பாலத்தை இடிக்கும் பணி தொடங்கும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். #VellamandiNatarajan
திருச்சி:

முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது 1 லட்சத்து 67 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்கிறது.

இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1928-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்பு பாலம் சேதம் அடைந்தது. அந்த பாலத்தை தாங்கி நிற்கும் ஆறாவது தூணில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது.

இந்த விரிசல் நேற்று முன்தினம் காலை மேலும் அதிகமானது. இதனால் அந்த தூண் அப்படியே தண்ணீருக்குள் இறங்கியபடியே சென்றது. நேற்று காலை சுமார் 10 அடி ஆழத்திற்கு தண்ணீருக்குள் இறங்கியது. எனவே இந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்த பாலத்தை நேற்று இரண்டாவது நாளாக ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ராசாமணி ஆகியோர் கூறியதாவது:-

கொள்ளிடத்தில் மேலும் நீர் திறப்பு அதிகரிக்கும் பட்சத்தில் ஆறாவது தூண் முற்றிலுமாக தண்ணீருக்குள் இறங்கி பாலத்தின் அந்த பகுதி அப்படியே இடிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பாலத்தில் யாரும் செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த பாலத்தை இப்போது உடனடியாக இடிக்க முடியாது.

கொள்ளிடத்தில் தண்ணீர் முற்றிலுமாக வற்றிய பின்னர் தான் தொழில் நுட்ப குழு தயாரிக்கும் திட்டத்தின் அடிப்படையில் அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி கேட்கப்படும். அதன் பின்னர் தான் பாலத்தை இடிக்கும் பணி தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார். #TNMinister #VellamandiNatarajan
Tags:    

Similar News