செய்திகள்

போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடிய போலீஸ்காரர் கைது

Published On 2018-08-18 15:07 IST   |   Update On 2018-08-18 15:07:00 IST
நெல்லையில் போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:

நெல்லை சங்கர்நகரில் சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. அப்போது காலரியில் அமர்ந்து பணம் வைத்து பந்தயம் கட்டி விளையாடிய வட மாநிலத்தவர்கள் 9 பேரை தாழையூத்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 9 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் இருந்த விலை உயர்ந்த ஒரு செல்போனை காணவில்லை. அந்த செல்போன் மதிப்பு ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தாழையூத்து போலீஸ் நிலைய அதிகாரிகள் அந்த செல்போனை திருடியது யார்? என்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பாளை ஆயுதப்படை போலீஸ்காரர் கோபாலகிருஷ்ணன் (வயது24) என்பவர் செல்போனை திருடி எடுத்து சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீஸ் அதிகாரிகள் பாளை ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள அவரது அறைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு காணாமல் போன விலை உயர்ந்த செல்போன் இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தார்கள். மேலும் ஆயுதப்படையில் போலீசார் உபயோகப்படுத்தும் சில பொருட்களும் அந்த அறையில் திருடி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

இது தொடர்பாக தாழையூத்து போலீசார் செல்போன் திருடியதாக போலீஸ்காரர் கோபால கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர். கைதான போலீஸ்காரர் ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியைச் சேர்ந்தவர் ஆகும். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News