செய்திகள்

கமல் தத்தெடுத்த கிராமத்தில் கிராம சபை கூட்டம் - உள்ளாட்சி தேர்தல் நடத்தகோரி தீர்மானம்

Published On 2018-08-16 09:54 GMT   |   Update On 2018-08-16 09:54 GMT
கமல் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தகோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர்:

நடிகர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கூறும் போது, ‘‘சுதந்திரதினத்தை யொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் முருகன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். சாலையை சீரமைத்தல், தெரு விளக்கு பராமரித்தல், குப்பைகளை அகற்றுதல், சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் அதே போல், பகுதி நேர ரே‌ஷன் கடைக்கு நிரந்தர கடை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதில் முன்னாள் ஊராட்சி தலைவி சுமதி சிதம்பரநாதன், மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா பிரசாத் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News