செய்திகள்

சுகாதார துறையில் வேலை வாங்கி தருவதாக பழ வியாபாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி

Published On 2018-08-08 17:18 GMT   |   Update On 2018-08-08 17:18 GMT
கோவில்பட்டியில் அரசு சுகாதார துறையில் வேலை வாங்கி தருவதாக, பழ வியாபாரியிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் அந்தோணி குரூஸ் (வயது 29). இவர் கோவில்பட்டி- மந்திதோப்பு ரோட்டில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு டிப்-டாப் உடை அணிந்த மர்மநபர் அடிக்கடி பழங்கள் வாங்க செல்வது வழக்கம். அப்போது அந்த நபர் தனது பெயர் ஜோதிராஜ் என்றும், கோவில்பட்டியில் வசிப்பவதாகவும், நெல்லையில் டாக்டராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், சுகாதார துறையில் ஊழியர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாகவும், இந்த வேலை பெறுவதற்கு ரூ.7¼ லட்சம் லஞ்சம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர், சுகாதார துறையில் பணியாற்றி வருவதாக பிரகாஷ் என்பவரையும், சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலராக பணியாற்றி வருவதாக கண்ணம்மா என்பவரையும் அந்தோணி குரூசிடம் அறிமுகப்படுத்தினார்.

இதனை உண்மை என்று நம்பிய அந்தோணி குரூஸ், தனக்கு சுகாதார துறையில் வேலை வாங்கி தர வேண்டும் என்று கூறி, அந்த 3 பேரிடம் மொத்தம் ரூ.7¼ லட்சம் வழங்கினார். பின்னர் அந்த 3 பேரும், அவருக்கு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதையடுத்து ஜோதிராஜ் வழங்கிய முகவரிக்கு சென்று பார்த்தபோது, அது போலியான முகவரி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதுகுறித்து விசாரிக்குமாறு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜிக்கு, கலெக்டர் சந்தீப் நந்தூரி பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணி குரூசிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News