செய்திகள்

மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது - பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை

Published On 2018-08-07 09:11 IST   |   Update On 2018-08-07 09:11:00 IST
மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும் நாடு முழுவதும் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நேற்று நள்ளிரவு தொடங்கிய இப்போராட்டம் இன்று நள்ளிரவு வரை நீடிக்கிறது.

முக்கிய தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்து கழகங்களில் உள்ள சில தொழிற்சங்கங்களும் வாகனங்களை இயக்காததால் பொது போக்குவரத்து சேவை  பாதிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வாகன உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் பல லட்சம் வாகனங்கள் ஓடவில்லை. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையில் தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
Tags:    

Similar News