செய்திகள்
தென்னந்தோப்பில் இறந்து கிடந்த மயில்கள்.

மதுரை அருகே தென்னந்தோப்பில் இறந்து கிடந்த 80 மயில்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா?

Published On 2018-08-04 06:22 GMT   |   Update On 2018-08-04 06:22 GMT
மதுரை அருகே 80-க்கும் மேற்பட்ட மயில்கள் வி‌ஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:

மதுரையை அடுத்த உத்தங்குடி கால்வாய் அருகே உள்ளது மருதங்குளம். இங்கு நீர்வரத்து கால்வாய், தென்னந்தோப்புகள், நஞ்சை நிலங்கள் உள்ளன. குளுமையான பகுதி என்பதால் இந்த பகுதிக்கு இரை தேடி ஏராளமான மயில்கள், காடை உள்ளிட்ட பறவைகள் வருகின்றன.

பறவை இனங்களுக்காக சிலர் நெல் உள்ளிட்ட உணவு தானியங்களை வழங்கி வந்தனர். இன்று காலை வழக்கம்போல் உணவு தானியம் கொடுக்க சென்ற ஒருவர் அங்கு ஏராளமான மயில்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினருடன் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த பகுதியில் ஆங்காங்கே குவியல் குவியலாக 80-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தன. காடை உள்ளிட்ட சில பறவைகளும் இறந்து கிடந்தன.

அதன் அருகே நெல் தானியங்களும் சிதறி கிடந்தன. வனத்துறையினர் அந்த நெல்லை சேகரித்தனர். அதில் வி‌ஷம் கலந்து இருக்கலாமா? என்பது குறித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

மயில்களை வேட்டையாடுவதற்காக சமூக விரோத கும்பல் வி‌ஷம் வைத்து கொன்றார்களா? அல்லது பயிர்களை நாசப்படுத்தும் மயில்களை கொல்வதற்காக வி‌ஷம் கலக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து வனத்துறையினரும், போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பறவையான மயில்கள் அழிந்துவரும் நிலையில் இன்று மதுரை அருகே 80-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News