செய்திகள்

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலம் விசாரித்த கேரள முதலமைச்சர்

Published On 2018-08-02 05:49 GMT   |   Update On 2018-08-02 05:49 GMT
காவேரி மருத்துவமனைக்கு வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து கடந்த 27-ம் தேதி நள்ளிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் என நேரில் வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். தொண்டர்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக காவேரி மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். காவேரி மருத்துவமனைக்கு சென்ற அவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், பிறவி போராளியான கருணாநிதியின் உடல்நிலை மிகவும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறினார்.

‘கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் நலம் விசாரித்தேன். கருணாநிதி உடல்நிலை வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்’ என்றும் பினராயி விஜயன் கூறினார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
Tags:    

Similar News