செய்திகள்

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு- அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கம்யூ. கட்சியினர்

Published On 2018-08-02 14:03 IST   |   Update On 2018-08-02 14:03:00 IST
8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர். #salemtochennaigreenexpressway

திண்டுக்கல்:

சேலம்- சென்னையிடையே 8 வழிச்சாலை அமைக்க பல்வேறு மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று திருவண்ணாமலையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். வெளியே அனுப்பினாலும் மீண்டும் நடைபயணம் தொடரும் என அறிவித்துள்ளதால் போலீசார் அவர்களை விடுவிக்காமல் உள்ளனர்.

இதனை கண்டித்தும் விவசாயிகளை பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரியும் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.

திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அமைச்சர் சீனிவாசனின் அலுவலகம் முன்பு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி அவர்கள் போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். அப்போது நடைபயணம் மேற்கொண்டவர்களை விடுவிக்க வேண்டும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என அரசுக்கு எதிராக அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். #salemtochennaigreenexpressway

Tags:    

Similar News