செய்திகள்

காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டி தர வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2018-08-01 12:39 GMT   |   Update On 2018-08-01 12:39 GMT
பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வருவதால் காந்தையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டிதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை. நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைபெய்தது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்த்தேக்கப்பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்த தொடர்மழை காரணமாக. பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் பவானிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் தொடர்ந்து நாளுக்குநாள் உயர்ந்து வந்தது. அணையின் நீர்த் தேக்கப்பகுதியில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளித்தது.

அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியதால் கோவைமாவட்டம் சிறு முகை அருகே லிங்காபுரம் அடுத்துள்ள காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்டப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 4 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களும் விவசாய கூலி தொழிலாளிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசல் மற்றும் படகு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக மாற்றுப்பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் லிங்காபுரம் வந்த சப்-கலெக்டர் கார்மேகம் தண்ணீரில் மூழ்கிய உயர் மட்டப்பாலத்தை பார்வையிட்டார். தண்ணீரில் மூழ்கிய பாலத்தின் மீது பரிசலில் பயணம் செய்தார். அதன்பின்னர் லிங்காபுரம் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இருந்து காந்தவயலுக்கு செல்ல 6 கிலோ மீட்டர் தொலைவில் தற்காலிமாக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதையை பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த கிராமமக்கள். தண்ணீரில் மூழ்கும் உயர் மட்டப்பாலத்தை உயர்த்திக் கட்டித்தர வேண்டும். மாற்றுப்பாதைக்கு செல்லும் வழியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான உப்புப்பள்ளம் பகுதியில் மழைநீர் செல்ல குழாய் அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை கேட்ட சப்-கலெக்டர் கார்மேகம் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார். அவருடன் தாசில்தார் புனிதா சென்றிருந்தார். #tamilnews
Tags:    

Similar News