செய்திகள்

சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்- அக்காள், தங்கை பலி

Published On 2018-08-01 15:48 IST   |   Update On 2018-08-01 15:48:00 IST
சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் பெரியப்பாவுடன் சென்ற அக்காள் தங்கை பலியாயினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம்:

கோவை மாவட்டம் சிறுமுகை, காந்தவயலை சேர்ந்தவர் கிருபைராஜ் (வயது 47). இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள தனியார் பஞ்சு மில்லில் அதிகாரியாக உள்ளார்.

நேற்று இரவு சத்தியமங்கலத்தில் அதிகாரி ஒருவரின் பிரிவுபசார விழாவின் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கிருபைராஜ் கலந்து கொள்ள இருந்தார்.

இதற்காக அவர் பவானிசாகருக்கு வந்தார். பவானிசாகர் நால்ரோட்டில் உள்ள தனது தம்பி பவானி சங்கர் வீட்டுக்கு சென்றார்.

அங்கிருந்து பிரிவுபசார விழா விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். அவருடன் பவானிசங்கரின் மகள்களான சந்திரலேகா (15), எழிலரசி (10) ஆகியோரும் சென்றனர்.

3 பேரும் மோட்டார் சைக்கிளில் பிரிவுபசார விழாவின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர் நோக்கி புறப்பட்டனர்.

சத்தியமங்கலம் அருகே அன்னூர்கவுண்டர்தோட்டம் என்ற இடத்தில் வந்த போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும், பவானிசாகர் நோக்கி சென்ற அரசு பஸ்சும் மோதிக்கொண்டன.

இதில் கிருபைராஜ், சந்திரலேகா, எழிலரசி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே எழிலரசி பரிதாபமாக இறந்தார்.

கிருபைராஜ், சந்திரலேகா ஆகியோர் பலத்த காயம் அடைந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பலியான எழிலரசி உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த கிருபைராஜ், சந்திரலேகா ஆகிய 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரலேகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிருபைராஜ் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பலியான சந்திரலேகா பவானிசாகர் தொட்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், அதே பள்ளியில் எழிலரசி 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

அவர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்து அவர்களது பெற்றோர், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. #tamilnews
Tags:    

Similar News