செய்திகள்

தலைமை ஆசிரியரை நீக்க கோரி அரசு பள்ளிக்கு பூட்டு போட்ட கிராம மக்கள்

Published On 2018-07-31 10:30 GMT   |   Update On 2018-07-31 10:30 GMT
சர்ச்சைக்குள்ளான தலைமை ஆசிரியரை நீக்க கோரி அரசு பள்ளிக்கு கிராம மக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எரியோடு:

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகில் உள்ள ஆர்.கோம்பை நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் மோகன்தாஸ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதவி கல்வி அதிகாரி அருண்குமாரையும், அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணையும் இணைத்து தவறாக சித்தரித்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் பதிவிட்டார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அருண்குமார் புகார் அளித்திருந்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து பள்ளிக்கு வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளை வலியுறுத்தி பரபரப்பு போஸ்டர்களை ஒட்டினர்.

புரோக்கர் தொழிலுக்காக போலியாக சங்கம் வைத்து செயல்படுவது நேர்மையாக செயல்படும் கல்வி அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது, பெண் அலுவலர்களை கொச்சைப்படுத்துவது, சாதி மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டங்களை தவறாக பயன்படுத்துவது போன்ற குற்றங்களை செய்து வரும் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

இன்று பள்ளிக்கு வந்த கிராம மக்கள் தலைமை ஆசிரியரை உள்ளே நுழைய விடாமல் நுழைவு வாயில் கேட்டை பூட்டினர். இது குறித்து தகவல் அறிந்ததும் எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அவர்கள் டி.எஸ்.பி.யிடம் இது குறித்து புகார் அளிக்குமாறும் அவர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உதவுவார் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News