செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்

Published On 2018-07-30 12:13 GMT   |   Update On 2018-07-30 12:13 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை இணைப்புச் சங்கங்களாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்தகைய கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாய பயிர்க்கடன்கள், விவசாய நகைக்கடன்கள் மற்றும் விவசாய கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் மூலம் விவசாய பயிர்க்கடன்கள் மற்றும் விவசாயகடன் அட்டை திட்டம் மூலமாகவும் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பயிர்க்கடன் என்பது விவசாயிகளின் உயிர்க்கடன். இத்தகைய பயிர்க்கடன்கள் அனைத்து விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். பயிர்க்கடன்கள் பெற்ற விவசாயிகள் குறித்த தவணைத் தேதிக்குள் திருப்பிச் செலுத்தும் நேர்வுகளில் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது.

இதற்கான வட்டியை அரசாங்கம் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. எனவே கடன் பெற தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயிர்க்கடன் பெற்று விவசாயத்தை பெருக்கிக் கொள்ளலாம். புதிய விவசாயிகளும் இதன் மூலம் பயன் பெறலாம்.

தற்போது பயிர்க்கடன்கள் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஒரு ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் உள்ள விவசாயிகளும் இக்கடன்களை எளிதாக பெற முடியும்.

விவசாய கடன் பெற்ற அனைத்து விவசாயிகளும் பயிர்க்காப்பீடு செய்யப்பட வேண்டும். விவசாயிகள் அந்தந்த விவகார எல்லைக்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி தேவையான ஆவணங்களுடன் மனுச் செய்து கடன் பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 9894040002 என்ற தொலைபேசி எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மீராபாய் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News