செய்திகள்

தமிழகத்தில் 30 மாவட்டங்கள் முழு சுகாதார நிலையை எட்டி உள்ளது- அமைச்சர் வேலுமணி தகவல்

Published On 2018-07-30 09:11 GMT   |   Update On 2018-07-30 09:11 GMT
தமிழகத்தில் 30 மாவட்டங்கள் 100 சதவீத சுகாதார நிலையை எட்டியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தொடக்க விழா, தூய்மை கணக்கெடுப்பு இலச்சினை அறிமுக விழா, தூய்மை வாகனம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி இயக்குனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தூய்மை ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழகத்தை முழு சுகாதாரம் அடைந்த மாநிலமாகவும், திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழ்நிலை இல்லாத மாநிலமாகவும் உருவாக்கும் வகையில் கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ. 4639 கோடி செலவில் 49.63 லட்சம் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 30 மாவட்டங்கள் 100 சதவீத சுகாதார நிலையை எட்டி உள்ளது.12,040 கிராம ஊராட்சிகள் திறந்த வெளியில் மலம் கழித்தல் அல்லாத ஊராட்சிகள் என கிராம சபை கூட்டங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மீதமுள்ள 484 கிராம ஊராட்சிகளும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளன.

2014-15-ம் ஆண்டு ரூ. 610 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம், 12,524 ஊராட்சிகளில் செயல்படுத்தபட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 66,025 தூய்மை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக நடப்பு ஆண்டில் ரூ. 206 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும் கிராமங்களில் குப்பையை எளிதாக அப்புறப்படுத்தும் வகையில் 93000 குப்பை தொட்டிகளும், 43000 மிதி வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை தர வரிசைப்படுத்த மத்திய அரசு தூய்மை கணக்கெடுப்பு-2018 திட்டம் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தூய்மை ரதம் அனுப்பப்பட்டு கணக்கெடுத்து தரவரிசைப் படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதன் மூலம் பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார வளாகங்கள், கிராம சந்தை, வழிபாட்டு தலங்கள் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர்கள் ஹரிஹரன் (கோவை), பழனிசாமி (திருப்பூர்), இன்னசென்ட் திவ்யா (நீலகிரி),பிரபாகரன் (ஈரோடு), நாகராஜன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், ஓ.கே. சின்னராஜ், ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குனர்கள் லட்சுமிபதி, ராதா, ராஜஸ்ரீ, விஜய முத்து மீனாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மற்றும் அரசு துறை அலுவலர்க்ள, மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News