செய்திகள்

தி.மு.க.வினர் வழிபாடு செய்வதை குறை சொல்லக்கூடாது- மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ கருத்து

Published On 2018-07-30 12:00 IST   |   Update On 2018-07-30 12:00:00 IST
கருணாநிதி உடல்நலம் பெற தி.மு.க.வினர் வழிபாடு செய்வதை குறை சொல்லக்கூடாது என்று மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார். #masubramanian #karunanidhi #dmkworship

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி தொண்டர்கள் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறார்கள். கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவர் கருணாநிதி. எனவே வழிபாடுகள் நடத்துவதை சிலர் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.

இதுபற்றி தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கலைஞர் 95 ஆண்டுகளாக பகுத்தறிவு வாதியாகவே வாழ்ந்து வருகிறார். பெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்பதில் உறுதியாக இருந்து தனது கொள்கைகளில் எந்த மாறுபாடும் இல்லாமலேயே இன்றளவும் வாழ்கிறார்.

அவர் விரும்பமாட்டார் என்பது உண்மைதான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு கலைஞர் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.


அந்த நம்பிக்கையின் காரணமாக கலைஞர் உடல்நலம் பெற வேண்டி அவர்கள் நம்பிக்கையின்படி வழிபாடு நடத்துகிறார்கள். அதை குறை சொல்லவும் கூடாது. தடுக்கவும் கூடாது. அது அவர்கள் விருப்பம்.

சாதி, மதம், இனம், அரசியல் என்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்து கலைஞர் வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எல்லோரும் வேண்டுவது எந்த தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு.

இவ்வாறு அவர் கூறினார். #masubramanian #karunanidhi #dmkworship

Tags:    

Similar News