செய்திகள்

விராலிமலை முருகன் கோவில் மலைக்கு வாகனங்கள் செல்ல ரூ.4 கோடி மதிப்பில் சாலை- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2018-07-28 10:27 GMT   |   Update On 2018-07-28 10:27 GMT
விராலிமலை முருகன் கோவில் மலைக்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நேரடியாக செல்லும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை:

வருவாய்த்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 509 பயனாளிகளுக்கு ரூ.76 லட்சம் மதிப்பீட்டிலும், விராலிமலையில் 301 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விராலிமலை மலங்குளம் ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது. இதேபோல் விராலிமலை சந்தை ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. விராலிமலை முருகன் கோவில் மலைக்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நேரடியாக செல்லும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விராலிமலை சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மணப்பாறை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. திருச்சியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News