செய்திகள்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் கொலை - சேலம் கோர்ட்டில் 3 பேர் சரண்

Published On 2018-07-25 15:49 IST   |   Update On 2018-07-25 15:49:00 IST
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
சேலம்:

நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளர். தொழில் அதிபரான இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளராக இருந்து வந்தார். இவர், சீர்காழி தென்பாதி திரிபுரசுந்தரி நகரில் கட்டியுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமை அன்று காலையில் ரமேஷ்பாபு சீர்காழி பிடாரிவடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் அதிபர் வீட்டுக்கு தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் இளவரசன் (25) என்பவர் ஓட்டினார்.

அப்போது ரமேஷ் பாபுவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து பேசி கொண்டிருந்தபோது மற்றொரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் ரமேஷ்பாபுவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய 3 பேர் இன்று மதியம் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எண்.2-ல் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், நாகை மாவட்டம் சீர்காழி மதுத்துறை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (வயது 28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு(34) மற்றும் புதுச்சேரி, மேல்காத்த மங்கலம் தேனீநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

சரண் அடைந்த இவர்கள் 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News