செய்திகள்
புனிதா, ஜெகநாதன்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு - மகளிர் விடுதியில் அதிகாரிகள் விசாரணை

Published On 2018-07-25 09:39 GMT   |   Update On 2018-07-25 09:39 GMT
கோவையில் மகளிர் விடுதி உரிமையாளர், வார்டன் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் மாணவிகள் தங்கியிருந்த விடுதியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை:

கோவை பீளமேட்டில் உள்ள மகளிர் விடுதியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் விடுதி வார்டன் புனிதா(வயது 32), விடுதி உரிமையாளர் ஜெகநாதன் (48) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இருவரும் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் லட்சுமி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

உதவி கமி‌ஷனர் சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஜெகநாதனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் ஜெகநாதன் ஈரோட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

இந்த விடுதி கடந்த 2 வருடங்களாக இயங்கி வருகிறது. உரிமையாளர் ஜெகநாதன் விடுதியில் தங்கிய மாணவிகள், இளம்பெண்களை தனது வலையில் வீழ்த்த பல்வேறு வகைகளில் முயற்சி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

கணவரை பிரிந்து வாழும் புனிதா விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் கனிவாக பேசி வலை விரித்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்? என போலீசார் கருதுகின்றனர். அவர்கள் யார்-யார்? என விசாரணை நடந்து வருகிறது.

நேற்று முன்தினமே விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலானோர் விடுதியை காலி செய்து வேறு விடுதிகளுக்கு சென்றுவிட்டனர். மும்பை, டெல்லி உள்பட வெளி மாநிலங்களை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் உள்ளனர். அவர்களும் வேறு இடம் பார்த்து வருகின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, புகாருக்குள்ளான விடுதிக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அங்கு தங்கியிருந்த மாணவிகள், இளம்பெண்களிடம் இதுநாள் வரை விடுதியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். ஏற்கனவே விடுதி உரிமையார், வார்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதியை மூட வேண்டும் என போலீஸ் தரப்பிலும் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் விடுதிக்கு சீல் வைக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News