செய்திகள்

பெல் நிறுவனத்தில் வேலை கேட்டு 4 விவசாயிகள் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

Published On 2018-07-23 10:13 GMT   |   Update On 2018-07-23 10:13 GMT
ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் வேலை கேட்டு 4 விவசாயிகள் மண் எண்ணை கேனுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலாஜா:

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை அருகே மத்திய பொதுத்துறை மின்மிகு உற்பத்தி நிறுவனமான பெல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தொடங்குவதற்கு, சுமார் 124 விவசாயிகளிடம் இருந்து பல ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பெல் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 109 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. கல்வி உள்ளிட்ட தகுதி அடிப்படையில் 15 பேருக்கு வேலை வழங்கப்படவில்லை.

அந்த 15 பேரும் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், பெல் நிறுவனம் வேலை வழங்க முன்வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 15 பேரில் 4 பேர் இன்று காலை பெல் நிறுவனத்தின் முன்பு உள்ள செல்போன் டவரில் மண்எண்ணை கேனுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

தகவலறிந்ததும், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வேணுசேகரன், வாலாஜா தாசில்தார் விஜயகுமார், ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான சிப்காட் போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர்.

செல்போன் டவர் மேல் இருந்த 4 பேரையும் சமரசம் செய்து கீழே வரவழைத்தனர். விசாரணையில், சிப்காட் புளியந்தாங்கல் ஏரிக்கோடி பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 44), பாலு (38) மற்றும் லாலாபேட்டையை சேர்ந்த சம்பத் (40), பாஸ்கர் (45) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

தற்கொலை மிரட்டல் விடுத்த 4 பேரிடமும் உதவி கலெக்டர், தாசில்தார் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், பெல் நிறுவனத்திடம் அவர்களுக்கு வேலை வழங்குவது பற்றியும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News