செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் சொத்துவரி 100 சதவீதம் வரை உயர்வு- வீடுகளுக்கு 50 சதவீதம் அதிகரிப்பு

Published On 2018-07-23 09:48 GMT   |   Update On 2018-07-23 09:48 GMT
தமிழ்நாடு முழுவதும் சொத்துவரியை 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்தது. வீடுகளுக்கு 50 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. #TNGovernment #PropertyTax
சென்னை:

தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டில் இருந்து சொத்துவரி உயர்த்தப்படாமல் இருக்கிறது.

இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 17-ந்தேதி அன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான அறிக்கையை 2 வார காலத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர் ஹர்மிந்தர்சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.



தமிழக அரசின் இந்த அரசாணைப்படி சொத்து வரியானது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்கிறது.

தமிழக அரசின் இந்த உத்தரவு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சொத்துவரி உயர்வு மூலம் வாடகை வீடுகளுக்கு 2 மடங்கு வரி உயர்கிறது.

வீட்டு வரியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கும் மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தாமதமாக வரி கட்டினால் அபராத தொகை விதிக்கவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment #PropertyTax
Tags:    

Similar News