செய்திகள்

என்ஜினீயரிங் படிப்புக்கு கலந்தாய்விற்காக 42 மையங்கள் தொடக்கம்- அமைச்சர் அன்பழகன்

Published On 2018-07-22 07:35 GMT   |   Update On 2018-07-22 07:35 GMT
கவுன்சிலிங்கில் மாணவர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தாங்கள் சேர விருப்பமுள்ள கல்லூரிகளை தேர்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் 42 மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பழகன் கூறினார்.
தர்மபுரி:

தர்மபுரியில் உள்ள பயணியர் மாளிகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் முதன் முறையாக நடப்பு கல்வியாண்டிற்கான என்ஜினீயரிங் படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அந்தந்த மாவட்டங்களிலேயே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது.

விண்ணப்பித்த மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்டு உள்ளது.

கவுன்சிலிங்கில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தாங்கள் சேர விருப்பமுள்ள கல்லூரிகளை தேர்வு செய்வதற்காக தமிழகம் முழுவதும் 42 மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அதனை மாணவ, மாணவிகள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

வருகிற 25-ந் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் தொடங்க உள்ளது. இந்த முதல் கட்ட கவுன்சிலிங் 3 நாட்களுக்கு நடைபெறும்.

இந்த கவுன்சிலிங்கில் 190-க்கும் மேல் கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எந்த கல்லூரிகளில் சேர வேண்டுமோ அந்த கல்லூரிகளை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் போது ஒரு மாணவனோ அல்லது மாணவியோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளை சேர விருப்பம் தெரிவிக்கலாம். இதுபோன்று அந்த மாணவ, மாணவிகள் நூறு கல்லூரிகள் வரை விருப்பம் தெரிவித்து தேர்ந்தெடுக்கலாம். இதில் எந்த கல்லூரியில் அவர்களுக்கு இடம் கிடைக்கிறதோ அந்த கல்லூரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

இதில் எதாவது மாற்றம் செய்து கொள்ளும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் 2-வது கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தங்களது விருப்ப கல்லூரிகளை தேர்ந்தெடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Anbazhagan
Tags:    

Similar News