செய்திகள்

விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடாததால் ரூ.130 கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2018-07-20 10:14 GMT   |   Update On 2018-07-20 10:14 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடாததால் ரூ.130 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
விழுப்புரம்:

பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்து அவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை 90 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளுக்கான ஒரு ஆண்டு கட்டணத்தை லாரி உரிமையாளர் சங்கம் செலுத்துவதை ஏற்றுக் கொண்டு சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சரக்குகள் ஏற்றி வந்த லாரிகள் சரக்குகளை இறக்கப்பட்டதும் தொடர்ந்து இயக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் லாரிகள் வந்த வண்ணம் இருக்கும். ஆனால் லாரிகள் ஸ்டிரைக்கால் சில லாரிகள் மட்டுமே சென்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் 80 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. லாரிகள் இயக்கப்படாததால் ரூ.20 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் இருந்து பொருட்கள் ஏற்றி செல்லும் 800 சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதனால் கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு பொருட்கள் ஏற்றி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சரக்குகள் தேங்கி கிடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தொழிற்சாலைகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டியில் இருந்து தினமும் கேரளா மற்றும் வெளிமாநிலங்களுக்கு 100-க்கணக்கான லாரிகளில் முந்திரி பருப்பு மூட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இன்று லாரிகள் ஓடாததால் முந்திரி பருப்பு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளரும், உற்பத்தியாளர் சங்க தலைவருமான ரமேஷ் தெரிவித்தார். #LorryStrike
Tags:    

Similar News