செய்திகள்

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து ரூ.5 லட்சம் சுருட்டல் - மோசடி ஆசாமி கைது

Published On 2018-07-19 20:30 GMT   |   Update On 2018-07-19 20:30 GMT
சென்னையில் நூதனமான முறையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து, ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்து ரூ.5 லட்சம் வரை சுருட்டிய மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டார்.
சென்னை:

கொடைக்கானலை சேர்ந்தவர் கார்த்திக். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் கொடைக்கானலில் குழந்தைகள் கேளிக்கை திரை அரங்கை நடத்தி வருகிறேன். சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற நபர் என்னை அணுகினார். திரையரங்க வாசலில் ஒரு கடை அமைத்து, பே.டி.எம். மூலம் டிக்கெட் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி சலுகை தருவதாக கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் அவர் திரையரங்க வாசலில் கடை அமைத்து பே.டி.எம். முறையில் கட்டணம் வசூலித்து டிக்கெட் வழங்கினார். இந்த ஆண்டும் அதுபோல அவர் கட்டணம் வசூலித்தார்.

இவ்வாறு அவர் கட்டணம் வசூலிக்கும்போது, வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை, வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ‘ஸ்கிம்மர்’ மிஷின் வழியாக பதிவு செய்துள்ளார்.

பின்னர் அந்த ரகசிய குறியீட்டு எண்களை அடிப்படையாக வைத்து, போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து சென்னையில் வங்கி ஏ.டி.எம். மையங்களில் இருந்து ரூ.5 லட்சம் வரை பணத்தை சுருட்டி உள்ளார். அந்த மோசடி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட சென்னை சித்தாலப்பாக்கம் வினோபாநகரை சேர்ந்த இம்ரான்கான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான போலி ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை தயாரிக்க உதவிய ‘ஸ்கிம்மர்’ கருவி உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இம்ரான்கான், கார்த்திக் எனும் போலியான பெயரில் இதுபோன்ற நூதனமான மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரியவந்துள்ளது. 
Tags:    

Similar News