செய்திகள்

மதுரையில் அரசு ஆஸ்பத்திரி நர்சை தாக்கி 16 பவுன் நகை பறிப்பு

Published On 2018-07-19 15:34 IST   |   Update On 2018-07-19 15:34:00 IST
மதுரையில் அரசு ஆஸ்பத்திரி நர்சை தாக்கி 16 பவுன் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

மதுரை:

மதுரை தெப்பக்குளம் நியூ பங்கஜம் காலனியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி கஸ்தூரி (வயது 48). இவர் முனிச்சாலையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நர்சாக பணபுரிந்து வருகிறார்.

இவர் தினமும் மொபட்டில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று இரவு பணியை முடித்துவிட்டு அதிகாலை 6 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து மொபட்டில் கஸ்தூரி வீட்டுக்கு புறப்பட்டார்.

தெப்பக்குளம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று கஸ்தூரியை மறித்து அவரை தாக்கினர்.

பின்னர் கழுத்தில் கிடந்த 16 பவுன் செயினை பறித்துக் கொண்டு 2 பேரும் அங்கிருந்து தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தெப்பக்குளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களிடம் நகைபறிப்பு, கொள்ளை போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது.

இது தொடர்பாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

குறிப்பாக தெப்பக்குளத்தில் காலையில் நடைபயிற்சி செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளன.

குற்ற சம்பவங்களை தடுக்காமல் போலீசார் ஆங்காங்கே நின்று கொண்டு வாகன சோதனையில் மட்டும் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News