செய்திகள்

ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியல்

Published On 2018-07-19 14:58 IST   |   Update On 2018-07-19 14:58:00 IST
ரெயில் தாமதமாக வருவதை கண்டித்து செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:

புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் பயணிகள் ரெயில் தினந்தோறும் செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு காலை 8.10 மணிக்கு வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் காலதாமதமாக தொடர்ந்து வந்தது.

இதனால் அதில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இது பற்றி அவர்கள் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து பாண்டிச்சேரி ரெயில் காலதாமதமாகவே வந்தது. இன்று காலை இந்த ரெயிலுக்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் காத்திருந்தனர்.

வழக்கம் போல் அந்த ரெயில் காலை 9.20 மணிக்கு தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.

அப்போது சில பயணிகள் மின்சார ரெயில் பாதையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆந்திராவில் இருந்து வந்த காச்சிகுடா, காக்கிநாடா எக்ஸ்பிரஸ்ரெயில்களும், திருமால்பூர் மின்சார ரெயிலும் வரும் வழியிலேயே நிறுத்தப்பட்டது.

இதே போல் சென்னையில் இருந்து வந்த ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரெயில்களை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த திடீர் மறியலால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News