செய்திகள்

பழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published On 2018-07-19 02:00 GMT   |   Update On 2018-07-19 02:00 GMT
பழனியில், ஓடும் ஆட்டோவில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #PalaniSchoolTeacher #pavithra
பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பகவதி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு பவித்ரா (வயது 24), மயில், அனிதா ஆகிய மகள்கள் உள்ளனர். பி.ஏ. படித்துள்ள பவித்ரா, பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு, அடுத்த மாதம் (ஆகஸ்டு) திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இவர், கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் பழனி ஆர்.எப். ரோட்டில் ஒரு வாலிபரை அவர் சந்தித்தார். அங்கிருந்து அவர்கள் 2 பேரும், முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் அடிவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

ஆட்டோவில் ஏறியதில் இருந்தே பவித்ராவிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. பழனி பூங்கா ரோட்டில் உள்ள தேவர் சிலை அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது, ஆட்டோவில் இருந்து திடீரென பவித்ரா அலறினார். இதனால் திடுக்கிட்ட டிரைவர் முத்துராமலிங்கம் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தினார்.

இதனையடுத்து அந்த வாலிபர், ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து தப்பியோடி விட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பவித்ரா ரத்தவெள்ளத்தில் ஆட்டோவுக்குள் இருந்தார். அவர் அருகே, ஒரு பிளேடு கிடந்தது. அந்த பிளேடால் அவருடன் பயணம் செய்த வாலிபர், பவித்ராவின் கழுத்தை அறுத்திருப்பது தெரியவந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த முத்துராமலிங்கம், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிசென்ற பவித்ராவின் உறவினர் மாயவனை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான், பவித்ரா கழுத்து அறுக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PalaniSchoolTeacher #pavithra
Tags:    

Similar News