செய்திகள்
பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி

காசிமேட்டில் ஆட்டோ கியாஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு - பெண்கள் சாலை மறியல்

Published On 2018-07-16 09:55 GMT   |   Update On 2018-07-16 09:55 GMT
காசிமேட்டில் ஆட்டோ கியாஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காசிமேடு ஜீவரத்னம் சாலையில் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:

காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இதே பகுதியில் ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

காசிமேடு சுடுகாடு, இடுகாடு ஆகியவை அருகில் உள்ளன. ஜீவரத்தினம் சாலை வழியாக அடிக்கடி இறுதி ஊர்வலங்கள் செல்லும். அப்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் கியாஸ் நிரப்பும் நிலையத்துக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அருகில் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இங்கு ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் அமைக்க கூடாது என்று அவர்கள் கூறி வந்தனர்.

இன்று காலை சிவாஜி காலனி, அமலாஞ்சிபுரம், ஒய்.எம்.சி.ஏ. குப்பம், விநாயகபுரம் பகுதிகளை சேர்ந்த 100-க்கும் அதிகமான பெண்கள் உள்பட ஏராளமானோர் காசிமேடு ஜீவரத்னம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆட்டோ கியாஸ் நிரப்பும் நிலையத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

இந்த மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு வந்து மறியல் செய்தவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். அப்போது பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மறியல் காரணமாக இந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News