செய்திகள்

அரசு அலுவலகங்களில் 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

Published On 2018-07-12 17:16 GMT   |   Update On 2018-07-12 17:16 GMT
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் விரிப்புகள், உணவு பொருட் களை எடுத்து செல்ல பயன்படுத்தும் பிளாஸ் டிக் கைப்பைகள், தட்டுகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை முற்றிலும் பயன்படுத்த கூடாது.

எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து துறை அரசு அலுவலர்களும் கடைபிடிப்பதுடன் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அனைத்து அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை, காகிதப்பை, பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
Tags:    

Similar News