செய்திகள்

பழவேற்காட்டில் 10 டன் பாறை மீன்கள் சிக்கியது

Published On 2018-07-10 08:36 GMT   |   Update On 2018-07-10 08:36 GMT
பழவேற்காடு கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் திடீரென டன் கணக்கில் ஏராளமான மீன்கள் சிக்கியது.

பொன்னேரி:

பழவேற்காட்டை சுற்றி உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்ற போது அவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் சிக்கவில்லை.

இந்த நிலையில் பழவேற்காடு கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் திடீரென டன் கணக்கில் ஏராளமான மீன்கள் சிக்கியது.

பாறைமீன் வகைகளில் ஒன்றான ராப்பாறை மீன்கள் ஒவ்வொரு மீனவர்களின் வலை கிழியக்கூடிய அளவிற்கு சிக்கியது. சுறா மீனும் பிடிபட்டது. அவற்றை மீனவர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு கரைக்கு கொண்டு வந்தனர்.

அதிகமாக மீன்கள் கிடைத்தது பற்றி அறிந்ததும் ஏராளமான மீன் வியாபாரிகள் அங்கு குவிந்தனர்.

அவர்கள் மீன்களை போட்டிபோட்டு வாங்கி வெளிசந்தைக்கும், கேரளா மற்றும் வெளிநாட்டிற்கு 15-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைத்தனர்.

ஒரு கிலோ பாறை மீன் ரூ.250-க்கு விற்கப்பட்டது. ஒரு மீன் 10 கிலோ முதல் 15 கிலோ வரை எடை இருந்தது. ஒரு லாரியில் 10 டன் மீன் ஏற்றப்பட்டது.

இது பற்றி பழவேற்காட்டை சேர்ந்த மீனவர் முத்து கூறும்போது, “நான் 25 வருடத்திற்கு மேலாக மீன் பிடித்து வருகிறேன். இந்தவகை பாறை மீன் இவ்வளவு அதிகமாக கிடைக்கவில்லை. இதுதான் முதல் முறை. இரண்டு மாதமாக மீன் கிடைக்காததால் வருமானம் இல்லாமல் இருந்தோம். இப்போது அதிக அளவு மீன்கள் சிக்கி இருப்பது எங்கள் பகுதி மீனவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Tags:    

Similar News