செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறிய ஐகோர்ட் நீதிபதிக்கு கொலை மிரட்டல்

Published On 2018-07-08 06:52 GMT   |   Update On 2018-07-08 06:52 GMT
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு கூறப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று இந்திராபானர்ஜி தீர்ப்பு வழங்கினார். அதே நேரத்தில் நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பு இதற்கு எதிராக இருந்தது. சபாநாயகர் தனபாலின் தகுதி நீக்க உத்தரவை கடுமையாக விமர்சித்து சுந்தர் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக அமைந்த இந்த தீர்ப்பு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாறுபட்ட தீர்ப்புகளால் சர்ச்சை ஏற்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டு 3-வது நீதிபதியாக நீதிபதி சத்திய நாராயணாவை நியமித்தது. இந்த வழக்கு விசாரணையை தொடங்கி இருக்கும். அவர் இந்த மாதம் (ஜூலை) 23-ந்தேதியில் இருந்து 5 நாட்கள் தினமும் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம் 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதி சத்திய நாராயணா வழங்கப் போகும் தீர்ப்புக்காக அ.தி.மு.க.வினரும் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் மனைவி, மகளுடன் சுந்தர் வசித்து வருகிறார்.

அவரது வீட்டுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. பெயர் ஏதுமின்றி மொட்டை கடிதமாக உள்ள அதில் நீதிபதி சுந்தருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்திரா பானர்ஜி சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பதை கண்டுபிடித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை ஏற்று கமி‌ஷனரும் மிரட்டல் விடுத்த நபரை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சுந்தரின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருடன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நீதிபதி சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். சந்தேக நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என்பது பற்றி திவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மிரட்டல் கடிதத்தை எழுதியது யார்? என்பது தெரியவில்லை. இதன் பின்னணியில் அரசியல் தொடர்புடைய நபர்கள் தான் இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மிரட்டல் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனை வைத்து குற்றவாளியை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News