செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க தனி இணையதளம்

Published On 2018-07-06 11:09 GMT   |   Update On 2018-07-06 11:09 GMT
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வந்த அலுவலர்களுக்கு மாற்றுப்பணி வழங்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. #Sterlite
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது கடந்த மே மாதம் 22-ந்தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை அரசு மூடி சீல் வைத்தது.

இதனிடையே ஆலை மூடப்பட்டதால் ஏராளமான தொழிலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் ஒப்பந்ததாரர்களும் இதை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. அந்த ஆலை இனி திறக்கப்படாது என்று அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக ஆலை ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு கடந்த மே மாதம் 22-ந்தேதி சீல் வைக்கப்பட்டது. மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமையில், ஆலையில் உள்ள கந்தக அமிலம் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஒரு மாத காலத்துக்குள் அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மேலும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வந்த அலுவலர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் WWW.thoothukudi.online என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வேலைபார்த்து, தற்போது வேலைவாய்ப்பற்ற ஊழியர்கள், அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் தனியார் நிறுவனத்தினரும், இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயோ டேட்டாவை பார்த்து தகுதி மற்றும் காலிப்பணியிடத்துக்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த இணைய தளத்தின் வாயிலாக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலுவலர்கள், ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் தங்களது பயோ டேட்டாவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #Sterlite
Tags:    

Similar News