செய்திகள்

இனி முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன் - நடிகர் கார்த்திக் பேட்டி

Published On 2018-06-30 04:37 GMT   |   Update On 2018-06-30 04:37 GMT
இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். “இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்” என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
சென்னை:

கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதுதொடர்பாக நடிகர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீபகாலமாக நான் அரசியலை விட்டு விலகியே இருந்தேன். அதற்கு சில விரும்பத்தகாத சம்பவங்கள் தான் காரணம்.

இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவர்களும் பகுதிநேர அரசியலில் தான் ஈடுபட்டு இருக்கிறார்கள். இருவரும் முழு நேர அரசியல்வாதியாக மாறவேண்டும். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும்.

நான் என் அப்பா முத்துராமனுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் என் மகன் கவுதம் கார்த்திக் என்னுடன் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது.



கவுதம் கார்த்திக்குடன் நான் இணைந்து நடித்தது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘மிஸ்டர் சந்திரமவுலி’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுமாதிரி ஒரு நல்ல கதையம்சம் உள்ள படத்தை டைரக்டர் திரு கொடுத்திருக்கிறார். தனஞ்செயன் பிரமாண்டமாக தயாரித்து இருக்கிறார்.

சினிமாவில் இப்போது உள்ள இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள். திறமையாக நடிக்கிறார்கள். கவுதம் கார்த்திக்கும் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டான். தொடர்ந்து அவன் கடினமாக உழைத்து நல்ல பெயர் வாங்கவேண்டும் என்று அவனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News