செய்திகள்

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் இன்று ரத்த தானம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2018-06-29 06:07 GMT   |   Update On 2018-06-29 06:07 GMT
சென்னையில் ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் 89 இடங்களில் 20 ஆயிரம் போலீசார் ரத்ததானம் செய்கின்றனர். #EdappadiPalanisamy #blooddonation
சென்னை:

தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இதில் சுமார் 4 லட்சம் யூனிட் ரத்தம் 89 அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

மீதமுள்ள 4 லட்சம் யூனிட் ரத்தம் தனியார் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 33 ஆயிரம் முதல் 35 ஆயிரம் யூனிட் வரை தேவைப்படுகிற ரத்தம் 89 அரசு ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது.

மே மாதம் கல்லூரி விடுமுறை என்பதால் கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைகிறது.

இதனால் ஜூன் மாதத்தில் ரத்தத்தின் தேவை அதிகரிக்கிறது. எனவே ஜூன் மாதத்தில் போலீசாரிடம் இருந்து ரத்தம் தானமாக பெற்று தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 89 இடங்களில் 20 ஆயிரம் போலீசார் ரத்த தானம் செய்தனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த போலீசாரின் ரத்ததான முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த மாபெரும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன் னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) விஜய குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன், காவல் துறை கூடுதல் இயக்குநர் (பயிற்சி) ஆர்.சி. குடவாலா, காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஆயுதப்படை) முகமது ‌ஷகில் அக்தர், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



புதுடெல்லியில் 26-ந்தேதி நடைபெற்ற “பாஸ்போர்ட் சேவா திவஸ்” விழாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் எம்-போலீஸ் ஆப் செயலியை உருவாக்கிய தமிழ்நாடு காவல்துறையின் பணியை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறைக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரியால் வழங்கப்பட்ட சான்றிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று காவல்துறை கூடுதல் இயக்குநர் (தொழில்நுட்பம்) மஞ்சுநாதா, காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு முகாம்களில் 20 ஆயிரம் போலீசாரும் ரத்த தானம் செய்தனர். ஒவ்வொருவரிடம் இருந்தும் 1 யூனிட் என மொத்தம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. 89 ரத்த வங்கிகளில் அவை பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டன.

இந்த ரத்தம் ஏழை-எளியவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட உள்ளது.#EdappadiPalanisamy #blooddonation
Tags:    

Similar News