செய்திகள்
மாயமான ஆறுமுகம்

கணவர் மாயம் - 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் புகார் செய்த மனைவி

Published On 2018-06-29 10:59 IST   |   Update On 2018-06-29 10:59:00 IST
ஈரோடு அருகே மாயமான கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் மனைவி புகார் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு, நசியனூர் அருகே உள்ள செம்மாம் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது54). கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயர் செல்வி(51).

இவர்களுக்கு விஜயா என்ற ஒரு மகள் உள்ளார். திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி கணவரும், மனைவியும் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றனர். பிறகு மனைவியிடம் ‘நீ வீட்டுக்கு போ.நான் எனது அம்மா வீட்டுக்கு போய் வருகிறேன்’ என்று கூறி விட்டு ஆறுமுகம் போனார்.

அன்று சைக்கிளில் போனவர்தான் இன்று வரை வரவில்லை. அவர் எங்கு சென்றார்?. என்ன ஆனார்?. இப்போது எங்கு இருக்கிறார்? என்று தெரியவில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக மாயமான கணவரை பல இடங்களில் தேடி..தேடி பிறகு அப்படியே மறந்து விட்டார் செல்வி.

இந்த நிலையில் திடீரென கணவர் நினைப்பு வந்த மனைவி செல்வி. ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீசில் “என் கணவரை காணவில்லை. கண்டுபிடித்து கொடுங்க” என்று கூறினார்.

போலீசாரும் புகார் எழுதி கொடுங்கம்மா... தேடுகிறோம்...என்று கூறினர்.

அதன்படி செல்வி எழுதி கொண்டு வந்த புகார் மனுவை போலீசாரிடம் கொடுக்க அதை படித்த போலீசாருக்கு தூக்கு வாரி போட்டது. 11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து கொடுங்கள்...என்று மனுவில் எழுதி இருப்பதை பார்த்து திடுக்கிட்டனர்.

என்னம்மா உன் கணவர் காணாமல் போய் 11 ஆண்டுக்கு பிறகு இப்போது வந்து புகார் கொடுக்கிறியே..இது நாள் வரை ஏன் புகார் கொடுக்க வரவில்லை? என கேட்டனர்.

அதற்கு செல்வி“ நான் உலக நடப்பு தெரியாதவள். வெளி உலகம் பத்தி எனக்கு அவ்வளவாக தெரியாது. யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். காணாமல் போன என் கணவர் வருவார்...வருவார்..என இத்தனை வரு‌ஷமா காத்திருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. எனக்கு சிலர் போலீசில் போய் புகார் கொடு என்று கூறினார்கள். அதனால் தான் இப்போது வந்து புகார் கொடுக்கிறேன் என கணவரை கண்டுபிடித்து தாருங்கள்” என்று கூறினார்.

புகாரை பெற்ற போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News